சென்னையில் புதிய சர்வதேச திரைப்பட விழா !
உலக படங்களை ., சினிமா ஆர்வலர்கள் & மாணவர்கள் எளிதில் காண ஓர் அரிய வாய்ப்பு !!
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல திரைப்பட விழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், அவை சினிமாவை பற்றி அறிந்தவர்களுக்கான விழாக்களாகவே இருக்கும் நிலையில், புதிய கண்ணோட்டத்துடன், சினிமாவை விரும்பும் கடைக்கோடி மாணவர்களுக்கும், சினிமா விரும்பிகள், உதவி இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு சர்வதேச திரைப்படங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது ‘தி கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா’ (The Corner Seats – International Film Festival)
ஏறக்குறைய 155 நாடுகளில் இருந்து படைப்புகள் சமர்ப்பிக்கப்பட இருக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் மாணவர்கள் பலர் தங்களது படைப்புகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். சர்வதேச அளவில் பெரும்பாலான இளைஞர்களின் படைப்புகள் இந்த விழாவில் திரையிடப்படுவது இதன் தனி சிறப்பாகும்.
இந்த திரைப்பட விழாவின் வெற்றி கோப்பை அறிமுகம் விழா சென்னையில் கடந்த பிப்.15 அன்று, நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம், படத்தொகுப்பாளரும் இயக்குநருமான பி.லெனின், இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சேகர், இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பி.சி.ஸ்ரீராம், “நான் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சி குறித்து , ‘கலைமாமணி’ நெல்லை சுந்தரராஜன் என்னிடம் சொன்ன போது, இதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இந்த நிகழ்ச்சியில் ஏதோ இருக்கிறது … என்று நினைத்தேன். அந்த உள்ளுணர்வு படியே இதில் கலந்து கொண்டேன்.
இன்று , சினிமா அனைவருக்குமானதாக மாறிவிட்டது. அதற்கு காரணம், இதுபோன்ற திரைப்பட விழாக்களும் தான். சாதாரணமாக தொடங்கப்படும் இந்த திரைப்பட விழா எதிர்காலத்தில் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவாக உயர வேண்டும் என்ரு வாழ்த்துகிறேன்.” என்றார்.
பி.லெனின் பேசுகையில், “அழைக்காமல் வருகை தரும் குணமும் உண்டு, சிலர் அழைத்தாலும் போவாத சினமும் உண்டு ‘ . இதுபோன்ற பல விழாக்களில் நான் பங்கேற்பேன், விருந்தினராக அல்ல ஒரு பார்வையாளராக கார்னர் சீட்டில் உட்கார்ந்து என்ன நடக்கிறது ? என்று கவனிப்பேன். இதுபோன்ற விழாக்களில் கலந்துக்கொண்டு நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். நேஷனல் அளவிலான படங்கள் பார்ப்பதற்காக டெல்லிக்கு செல்வேன். என்னுடன் கிராமத்தில் இருந்து வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு செல்வோம். இப்போது இங்கேயே சர்வதேச அளவிலான விழாக்கள் நடக்கும் போது நன்றாக இருக்கிறது. அதிலும், கல்லூரிகளிலும் இதுபோன்ற விழாக்களை எடுத்து செல்வது வரவேற்க தக்கது. திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங் எப்படி முக்கியமோ..? அதுபோல் இசையும் முக்கியமாக இருக்கிறது. நாங்கல்லாம் கல்லூரிக்கு எல்லாம் போகாமல் ஏதோ ஒன்றை கற்றுக்கொண்டு இத்தனை படங்கள் பணியாற்றி விட்டோம். ஆனால், இப்போது பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இசை குறித்து எடிட்டர்களுக்கு தெரிந்தால், எடிட் கட்டிங்கில் அடித்து தள்ளிக்கொண்டு போகலாம். ஆனால், சிலருக்கு அதுபற்றி தெரியாததால், இப்போது 10 நாட்கள் எடிட் செய்கிறார்கள். இதை ஏன் சொல்கிறேன்… என்றால் , இதுபோன்ற திரைப்பட விழாக்கள் தான் என்னை வளர்த்தது. என்னை போல் பலர் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்று பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும், வாழ்த்துகள் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், “பொதுவாக நான் விழாக்களில் அதிகம் கலந்துக்கொள்ள மாட்டேன். நான் பேசுவதை விட என் இசை பேசட்டும் என்பதால் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மாட்டேன். அண்ணன் நெல்லை அழைத்ததால் நான் வந்தேன். நான் வருவதாக சொன்ன பிறகு தான், பிசி, லெனின் ஆகியோர் வருவதாக சொன்னார்கள். இந்த விழா நடத்துவதற்கான நோக்கம் வரவேற்கத்தக்கது. அதற்காக சபரீசனை பாராட்டுகிறேன். இந்த கார்னர் சீட்ஸ் விழாவை உலக அளவில் பெரியதாக்குவேன் என்று சொன்னார் அல்லவா..? அதற்கு நிறைய நாட்கள் ஆகும். ஆனால், அந்த முயற்சியை எடுத்திருக்கிறார் அல்லவா .?! அது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. இந்த குறுகிய நாட்களில் இப்படி ஒரு சிறப்பான விழாவை ஏற்பாடு செய்த நெல்லை சுந்தராஜன் அவர்களுக்கும் வாழ்த்துகள். எல்லோருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
வி.சேகர் பேசுகையில், “சினிமாவில் இன்று பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற திரைப்பட விழாக்களின் வருகை மிகவும் அவசியம். இப்படி ஒரு விழாவை உருவாக்கிய இந்த குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.
தி கார்னர் சீட்ஸ் திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர் சபரீசன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்ப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து நெல்லை சுந்தரராஜன் சாரிடம் சொன்னோம். அவர் உடனே செய்து விடலாம் என்று கூறி, இன்று பெரிய நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார். இங்கு வந்திருக்கும் ஜாம்பவான்களுக்கு… எனது நன்றிகள். இந்த திரைப்பட விழா ஆரம்பித்ததற்கு காரணம், தற்போது திரைப்பட விழாக்களில் வரும் திரைப்படங்கள், அனுபவம் வாய்ந்தவர்களின் படைப்பாக தான் இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் மாணவர்களின் படைப்புகள் அதிகமாக வருகிறது. அப்போது தான் நம்ம ஊரில் ஏன் இதுபோன்ற படங்கள் வருவதில்லை ? என்று தோன்றியது. எனவே, கல்லூரிகளுக்கு இந்த திரைப்பட விழாவை கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் இப்படி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தோம். இதற்காக எங்களுக்கு பலர் உதவி செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றி.
திரைப்படம், ஆவணப்படம், திரைகக்தை தொகுப்பு, மொபைல் திரைப்படங்கள், குறும்படங்கள் என்று மொத்தம் 41 பிரிவுகளில் உங்கள் படைப்புகளை filmfreeway முலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஏபரல் 4ம் தேதி.
திரைப்பட திரையிடல் மற்றும் விருது விழா ஏபரல் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய திரைப்படங்கள் உலக திரைப்பட விருதுகளை நோக்கி படையெடுப்பதைப்போல், உலக திரைப்படங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘தி கார்னர் சீட்ஸ் ‘திரைப்பட விழாவில் பங்கேற்க வைப்பதை கெளரவமாக கருத வைப்பதே எங்கள் நோக்கம்.
இங்கு , தி கார்னர் சீட்ஸ் திரைப்பட விழாவின் கோப்பையை வெளியிட்டிருக்கிறோம். அதில் ஜல்லிக்கட்டு காளை இருக்கிறது, அதற்கு காரணம் பல திரைப்பட விழாக்களில் அவர்களுடைய கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால், நம்ம ஊரில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் நம்ம தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டுக்காளையை வைத்துள்ளோம்.” என்றார்.
முன்னதாக மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தரராஜன், சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். சபரீசன் உள்ளிட்ட தி கார்னர் சீட்ஸ் திரைப்பட விழாக்குழுவினர்., சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனார்.