Take a fresh look at your lifestyle.

‘கொலை’ – திரை விமர்சனம்

717

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், பாலாஜி. கே. குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கொலை’. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தில் ஒரு கொலை, அதைச் செய்தது யார்? எப்படி.? எதற்கு ..? என்பதையும்., ஒரு பெண் போலீஸ் அதிகாரி ., குடும்ப சூழலால் சற்றே விரக்தியில் இருக்கும் தன் சீனியர் அதிகாரி துணையுடன் அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் ? என்பதையும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் இந்த ‘கொலை’.

கதைப்படி… சகல பாதுகாப்பு வசதிகளும் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரபல மாடல் அழகி லைலா – மீனாட்சி சௌத்ரி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்வையிடும் போது, அங்கு வருகை தந்த உயரதிகாரி புதிதாக பணியில் சேர்ந்த ரித்திகா சிங்கிடம் அந்த வழக்கை குறுகிய நாட்களுக்குள் விசாரணை செய்து முடிக்குமாறு உத்தரவிடுகிறார். மேலும் ஏற்கனவே பல வழக்குகளில் உண்மையை கண்டறிந்து அனுபவம் வாய்ந்த அதிகாரியான விநாயக் -விஜய் ஆண்டனி யிடம் பேசி அவரது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்படி விசாரணை மேற்கொண்டு வழக்கை முடிக்குமாறு உத்தரவிடுகிறார். விநாயக்- விஜய் ஆண்டனியுடன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அவரது மகள் சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயங்களுடன் உயிர் தப்பிய விஜய் ஆண்டனி மகளின் உடல் நிலை மற்றும் தன் மனநிலையை கருத்தில் கொண்டு சில மாதங்களாக காவல்துறை பணியிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அவரிடம் பயிற்சி பெற்ற ரித்திகா சிங் கேட்டுக் கொண்டதற்காக ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு வழக்கை விசாரணை செய்ய ரித்திகா சிங்கிற்கு உதவ ஸ்பாட்டுக்கு வருகிறார்.

முதலில் மாடல் அழகியின் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரப் பெண், அங்குள்ள காவலாளிகள், அங்கு வந்து சென்றவர்கள்… என பல கோணங்களில் விசாரணை தொடங்க தொடர்கிறது. மேலும் , மாடல் அழகியின் நண்பரும் இசை மீது காதல் கொண்ட நீதிபதி வீட்டு பிள்ளை சித்தார்த்தா, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மூலை வளர்ச்சி இல்லாத பையன், மாடலிங் துறையில் பிரபல நிறுவனத்தின் மேலாளர் என அந்த மாடல் அழகி லைலா மீனாட்சியுடன் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை தொடர்கிறது.

இறுதியாக மாடல் அழகியை ? எப்படி ? எதற்காக ..? யார்… கொலை …? என்பதை விநாயக் – விஜய் ஆண்டனியும் அவரது உதவி கோரி ரித்திகா சிங் கும் கண்டுபிடித்தனரா ? இல்லையா ..?! என்பதே ‘கொலை’ படத்தின் மீதிக்கதையும களமும்.

இந்தப் படத்தில் புதுவிதமான தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டுள்ளார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும் அதை தெளிவாக உணரமுடிகிறது. மாடலிங் துறையை விரும்பும் பெண்கள், அந்த துறையில் ஜொலிப்பதற்காக அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்கள், அறிவியல் வளர்ச்சியை குற்றவாளிகள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.

க்ரைம், த்ரில்லர் கதை களத்தில் காட்சிகள் நகர்ந்தாலும், அடுத்து என்ன என பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், வேகத்தை அதிகரிக்கும் விதமாக திரைக்கதை அமைந்திருக்கலாம். இருந்தாலும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகளையும் பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.

ஒரு கொலை, அதைச் செய்தது யார்? என வழக்கமாக நாம் பல படங்களில் பார்த்த ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதையைத் தன் பாணியில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே குமார்.

இப் படத்தின் மேக்கிங், வித்தியாசமான காட்சி அமைப்புகள், வியக்க வைக்கும் கேமரா கோணங்கள், தரமான பின்னணி இசை …என ஒரு ஹாலிவுட் கிரைம் திரில்லர் படத்திற்கு நிகராக ‘கொலை’ படத்தை தரமாக தயார் செய்து ரசிகர்களின் கண்களுக்கு மாயா ஜால வித்தை காட்டியுள்ளார் இயக்குநர் பாலாஜி கே குமார். இவரது இயக்கத்தில சிறப்பான மிகச்சிறப்பான காட்சி அமைப்புகள் படம் முழுக்க இடம் பிடித்து இத்திரைப்படத்துடன் நம்மை ஒன்றை வைத்து விடுகிறது. ‘கொலை’ படத்தின் கதை என்பது வழக்கமான ஒரு கதையாக இருந்தாலும், இவரது பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும், அதை கலக்கலாக சொன்ன விதமும் ஹாலிவுட் தரத்தில் அமைந்து, அதே சமயம் மிக அழகாகவும் கவிநயத்துடனும் கூடவே, நேர்த்தியாகவும் அமைந்து இத்திரைப்படத்துடன் படம் பார்க்கும் அனைவரையும் ஒன்ற வைத்து ரசிக்க வைத்துள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி அமைப்புகள் மூலம் நம்மை மிரளச் செய்துள்ளார் இயக்குநர் பாலாஜி கே குமார்.

‘கொலை’ படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் இருந்து கிளைமாக்ஸில் யார் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் ..? என்று யூகிக்க முடியாத படி திரைக்கதையை நகர்த்தி படத்தை கலர்ஃபுல்லாக்கியுள்ளாரபடத்தின் முதல் பாதி சற்று மெதுவாகவும், இரண்டாம் பாதி அதை விட மெதுவாகவும் நகர்வது இப்படத்தின் பெரும் பலவீனம் என்றாலும் , இறுதி காட்சியில் சீட்டின் நுனிக்கு ரசிகர்களான நம்மை அழைத்து வரும்படி சற்று நிறைவாக முடிந்திருப்பது முழு திருப்பதி.

விஜய் ஆண்டனி எப்போதும் போல் தன் வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் தனது ஹேர் ஸ்டைலில் மட்டும் வித்தியாசம் காட்டி இருக்கும் அவர் நடிப்பிலும் ஏதாவது வித்தியாசம் காட்ட முயன்றிருக்கலாம்.

அதே நேரம் , பெண் போலீசாக வரும் ரித்திகா சிங் தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சில இடங்களில விசாரணை காட்சிகளில் நிறைவாக நடித்து , நம் கவனம் ஈர்க்கிறார் மாடலாக வரும் மீனாட்சி சவுத்ரி. தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மிகவும் அனுதாபமிக்க கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீனாட்சி, அதை திறம்பட செய்து இருக்கிறார். மீனாட்சியின் உடல் வாடு அவரை ஒரு அழகிய மாடல் ஆக நன்கு ஜொலித்திட வைத்திருக்கிறது. அதிலும், அந்த ” பார்த்த ஞாபகம் இல்லையோ ..” பாடலில் அம்மணி சிவப்பு வண்ண பின்னணியில நம்மை பிரமிக்க வைக்கிறார். படத்தில் பிற முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் மீனாட்சியின் நண்பர் சங்கர் சித்தார்த்தா, போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜென்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் கிஷோர் குமார், ஏஜென்சி தலைமை அதிகாரி ராதிகா சரத்குமார் ஆகியோர் அவரவருக்கான வேலையை திறம்பட செய்துள்ளனர்.

குறிப்பாக இதில் மாடலிங் மேனேஜராக வரும் கிஷோர் குமார் தன் யதார்த்தமான நடிப்பால், எப்போதும் போல் நம் கவனம் ஈர்க்கிறார்.

சிவக்குமார் ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். இவரது நேர்த்தியான கேமரா கோணங்களும் வித்தியாசமான ஒளி அமைப்புகளும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் ”பார்த்த ஞாபகம் இல்லையோ ..” ரீமிக்ஸ் பாடல் தாளம் போட்டு கேட்கும் ரகம். பின்னணி இசை பிரம்மாண்டம். இவரும் இப்படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் பின்னணி இசை கொடுத்து இருக்கிறார். இவர்கள் இருவரின் பங்களிப்பே இப்படத்தின் மிகப்பெரிய பலம் ஆக இயக்குனர் பாலாஜி கே.குமாருக்கு கை கொடுத்துள்ளது.

ஆர். கே. செல்வாவின் படத்தொகுப்பும் இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் கொடுக்க உதவி புரிந்துள்ளது.

முழுக்க முழுக்கக் காட்சி அமைப்புகளை மட்டுமே நம்பி உருவாக்கி இருக்கும் இத்திரைப்படம், அதை மிகச் சிறப்பாகச் செய்து காண்பவர் கண்களுக்கு கதைக்களம் கொலை , அது சம்பந்தமான விசாரணை என்றாலும் கலர்ஃபுல் விருந்து படைத்து அதன் மூலம் கைத்தட்டலும் பெற்று இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மர்டர் மிஸ்டரி கதையை இந்த மாதிரி ஹாலிவுட் படங்களுக்கு நிகரா டெக்னிகல் ஸ்டைலில் எந்த இயக்குநரும் கொடுத்தது இல்லை. அதை இப்படம் மிகச் சிறப்பாக கொடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறது. அதே நேரம், கதையில் இன்னும் சற்றே இயக்குநர் கவனமாக இருந்திருந்தால் ‘கொலை’ அனைவரது நெஞ்சங்களையும் இன்னும் பெரிய அளவில் கொள்ளை கொண்டிருக்கும் என்பது நம் கருத்து.

மொத்ததில்” ‘கொலை’ டெக்னிக்கலாக கொன்னுட்டாங்க! ஸ்டோரி & ஸ்கிரின் ப்ளே யில் அய்யோ கொல்றாங்க ! கொல்றாங்க !!”