Take a fresh look at your lifestyle.

பஞ்சாப் அணியை துவம்சம் செய்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்!

329

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்ததால் ஸ்கோர் 201/6 என்ற நிலையை அடைந்தது. இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஹைதராபாத் பௌலர்கள், பீல்டர்கள் இணைந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைப் பரிசாக வழங்கினர். கடைசி நேரத்தில்

நிகலோஸ் போரன் அதிரடியாக விளையாடியதால், ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், ரஷீத் கான் அபாரமாக பந்துவீசி போரனை ஆட்டமிழக்கச் செய்து மொத்தம் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக கருதப்படும் ஜானி பேர்ஸ்டோ – டேவிட் வார்னர் இணை, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பட்டையை கிளப்பியது.

கடந்த வருடம் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப் அமைத்து நான்கு முறை 100 ரன்களை கடந்து, அணியின் ஒட்டுமொத்த ரன்களில் 60 சதவீத ரன்களை இருவரும் இணைந்து எடுத்தனர். இந்த வருடமும் அதே வேகத்தில் ரன் வேட்டையைத் தொடர்ந்துள்ளனர். பேர்ஸ்டோ அடித்து ஆடிய நிலையில், வார்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்தாவது முறையாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அசத்தினர்.

வார்னர், பஞ்சாப் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக ஒன்பதாவது அரை சதத்தைக் கடந்து சாதனை படைத்தார். இறுதியில், 40 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவும் அதே ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சன் ரைசர்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 202 ரன்கள் இலக்கை துரத்திக் கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கியது.

நிகலோஸ் போரனை தவிர்த்து மற்ற அனைவரும், ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி ஆட்டமிழந்தனர். கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நிகலோஸ் போரன் மட்டும் தனியாளாகப் போராடிக் கொண்டிருந்தார்.

ஆட்டம் ஹைதராபாத் அணிக்குச் சாதகமாக போய்க் கொண்டிருந்த நேரத்தில், அப்துல் சமது வீசிய ஓவரில் 28 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார். 37 பந்துகளில் 7 சிக்ஸர் விளாசி 77 ரன்கள் சேர்த்த அவர், 15ஆவது ஓவரில ரஷீத் கானின் மாயாஜால சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். நிகோலஸ் போரனை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தலா 12 ரன்களை கூட கடக்காததால், 69 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைப் பஞ்சாப் அணி பதிவு செய்தது.