Take a fresh look at your lifestyle.

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ‘லைகா’ சுபாஸ்கரன் & இயக்குநர் மணிரத்னம் இணைந்து ., ஒரு கோடி நன்கொடை !!

210

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது.

இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர். மேலும் , அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்தனர். அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர்.

இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய அமரர் கல்கிக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ஒரு கோடி ரூபாயை மூலதன நிதி உதவியாக வழங்கி இருக்கிறார்கள். லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த செயலுக்கு, திரை உலகினர் மட்டுமல்லாமல், கல்கியின் வாசகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.