Take a fresh look at your lifestyle.

சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள் !

'சொப்பன சுந்தரி' பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு!!

270

‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபலமான வணிக வளாகத்தில் நடைபெற்றதும். இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதும் அறிவோம்.

அவ்விழாவில் ‘சொப்பன சுந்தரி’ படத்தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு -விவேக் ரவிச்சந்திரன் மற்றும் தீபா பேசுகையில்,
”இயக்குநர் சார்லஸிடம் கதை கேட்டோம். கதை பிடித்திருந்தது. காமெடி எண்டர்டெய்னராக இருந்தது. பத்து நாட்களில் படத்தின் பணிகளை தொடங்கினோம். சொன்ன கதையை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார். டார்க் காமெடி, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, இசை, எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், லஷ்மி பிரியா சந்திர மௌலி, தீபா சங்கர் என மூன்று நாயகிகளின் ஜோடி, திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வந்து ரசிப்பதற்கான நிறைய நகைச்சுவை காட்சிகள்… என அனைத்து அம்சங்களும் இருப்பதால், ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.” என்றனர்.

நடிகை லட்சுமி பிரியா சந்திர மௌலி பேசுகையில், ” இந்தத் திரைப்படத்திலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நான் பின்னணி பேசவில்லை. முதல்முறையாக இந்த படத்தில் நடனமாடி இருக்கிறேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முதல் முறையாக கமர்சியல் படங்களில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. நகைச்சுவை காட்சிகள் திரையில் மட்டுமல்லாமல் திரையின் பின்னணியிலும் நடைபெற்றது. படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் உற்சாகமாக பணியாற்றினோம். ” என்றார்.

இயக்குநர் சார்லஸ் பேசுகையில், ” படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது அனைவருக்கும் தெரியவரும். நான் இயக்கிய முதல் படமான ‘லாக்கப்’ திரில்லர் திரைப்படமாக இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கினேன். இந்தத் திரைப்படமும் குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறேன். இந்த திரைப்படத்தின் கதையை, நம்முடைய வீட்டின் பக்கத்து வீடுகளில் நடைபெறும் கதையாக உருவாக்கி இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தில் ‘சொப்பன சுந்தரி’யாக ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்வதன் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். தன்னுடைய தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமல்ல.. லட்சுமி பிரியா மற்றும் தீபா சங்கர் ஆகியோரும் தங்களின் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.

இந்த திரைப்படம் திருக்குறள் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த பிறகு, பார்வையாளர்கள் அனைவரும் ஒரு திருக்குறளின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்வார்கள். ” என்றார்.

இவ்விழாவில் .
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ”கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். ‘கனா’ படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, ‘க /பெ ரணசிங்கம்’ படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, ‘சொப்பன சுந்தரி’ படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் , இயக்குனர்கள்தான்…. காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குநர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும்.. பிரமிப்பாகவும்… காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.

இயக்குநர் சார்லஸ், ஆரம்பத்தில் ஒருசில காரணங்களால் , இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான். அதன் பிறகு கோபத்தால் எதுவும் நிகழாது என்பதை உணர்ந்தார். கோபத்தால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன். பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும். எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். என்னுடைய பங்களிப்பை முப்பது நாளில் நிறைவு செய்தார்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக… சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால்.. அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குநர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

‘சொப்பன சுந்தரி’ படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் , இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால்… மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இது சரியாக செய்து விட்டால்.. அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளும், இயக்குநர் சொல்லித் தந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இது முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. ” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது அவ்விழாவில் ஹைலைட்டாக அமைந்தது என்றால் மிகையல்ல.