“என் தம்பி ருத்ராவுக்கு முதல் படத்திலேயே நிறைய முத்த காட்சிகள் !”
-- ‘ஓஹோ எந்தன் பேபி’ விஷ்ணு விஷால் மகிழ்ச்சி !!
நடிகர் விஷ்ணு விஷால் ., தனது தம்பி ருத்ராவை ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
சுமார் 400-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவரும், நடிகருமான ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணகுமார் ராம்குமார் ., இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராகுல் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படக்குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
நடிகர் விஷ்ணு விஷால் படம் பற்றி கூறுகையில், “என் தம்பியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் நீண்ட நாள் திட்டம், அதற்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும் என்பதால் இதன் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். இது முழுக்க முழுக்க காதல் கதை. என் படங்களில் காதல் இருந்தாலும், முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட படங்களில் நடித்ததில்லை. ஆனால், என் தம்பி முதல் படத்திலேயே ஒரு காதல் கதையில் அறிமுகமாவது மகிழ்ச்சி.
இந்த படத்தில் நான் நடிகர் விஷ்ணு விஷாலாகவே நடிக்கிறேன். ருத்ரா உதவி இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கிறார். நான் ஆக்ஷன், திரில்லர் ஜானர் படங்களில் நடித்திருந்தாலும் காதல் கதைகளில் நடிக்கவில்லை. அதனால் எனக்கு ஒரு காதல் கதை படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை, அந்த நேரத்தில் எனக்கு வேறு ஒரு ஜானர் கதையை சொல்ல வரும் உதவி இயக்குநரான ருத்ரா, என் ஆசையை தெரிந்துக் கொண்டு எனக்காக ஒரு காதல் கதையை எழுதுகிறார், அதன் பிறகு என்ன ஆனது .? என்பதை முழுமையான காதல் படமாக சொல்வது தான் ‘ஓஹோ எந்தன் பேபி’.
ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்த இந்த கதை சரியாக இருக்கும் என்பதால் இதை தயாரிக்கவும் முடிவு செய்தேன். இப்பட கதை நாயகர் ஒரு உதவி இயக்குநர் இயக்குநராக ஒரு கதா நாயகரை தேடி கதை சொல்கிறார் என்றதும் ., இதில் வரும் நாயக நடிகர் கதாபாத்திரத்திற்கும் வெளியே தேடுவதை விட, நாமே செய்துவிடலாம்… என்று தோன்றியது. அதனால் நானே நடித்து விட்டேன், படம் முழுவதும் வருகிறேன். எனக்கும் இது முதல் காதல் படம் என்பதால் எனக்கும் புது அனுபவமாக இருந்தது.
அதே நேரம் இப்படத்தில் ருத்ராவுக்கும் ஒரு காதல் இருக்கும், எனக்கும் ஒரு காதல் இருக்கும், ருத்ராவின் அம்மா – அப்பா கதாபாத்திரங்களுக்கு இடையேயும் ஒரு காதல் இருக்கும் . ஆனால் ., ருத்ராவுக்கு மட்டுமே அவரது நாயகியுடன் முத்தக்காட்சிகள் நிறைய இருக்கும். இப்படி படம் முழுவதுமே காதல் மற்றும் பொழுதுபோக்கான அம்சங்கள் நிறைந்திருக்கும். அதனால், இது முழக்க முழுக்க ஒரு காதல் படமாக இருக்கும்.
ருத்ராவுக்கு இந்த கதை மிக பொருத்தமாக இருக்கும். அவர் இயல்பாகவே துறுதுறுவென்று இருப்பார் என்பதால் அவருக்கு காதல் கதை மிக பொருத்தமாக இருக்கும். நான் இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் ஒரு படத்தில் கூட எனக்கு முத்தக் காட்சிகள் அமைந்ததில்லை, ஆனால் ருத்ராவுக்கு முதல் படத்திலேயே மூன்று முழு முத்தக் காட்சிகளும் சில காதல் நெருககம் கிறக்கம் மிகுந்த காட்சிகளும் அமைந்திருக்கிறது.
ருத்ரா எனது சித்தி மற்றும் பெரியப்பா பையன், அவரது அப்பாவுக்கும், என் அப்பாவுக்கும் ஒரே நேரத்தில் தான் திருமணம் நடந்தது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். ருத்ராவின் அப்பா, எனது பெரியப்பாவுக்கு தான் சினிமா மீது ஆர்வம். நான் நடிக்க வந்ததற்கும் அவர் தான் காரணம். அவர் தான் சிறு வயதில் இருந்தே சினிமா சினிமா … என்று சுற்றி வந்தார். அவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார், அவரது கனவை நிறைவேற்றுவதற்காக என்னை கிரிக்கெட்டில் இருந்து சினிமாவிற்குள் தள்ளியதில் முக்கிய பங்கு என் பெரியப்பாவுக்கு உண்டு. இப்பொழுது அவரது மகன் எனது தம்பி ருத்ராவும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
சினிமாவில் என்னுடைய ஆரம்பக்கட்ட வாழ்க்கையை ருத்ரா பார்த்திருக்கிறார், உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார், அதனால் அவருக்கு சினிமா மீதான புரிதல் இருக்கிறது. சினிமாவுக்காக நடிப்பு பயிற்சி … நடன பயிற்சி , சண்டை பயிற்சி ….என தன்னை முழுவதுமாக தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை நாங்கள் பார்த்துவிட்டோம், பலரும் பார்த்தார்கள். ருத்ரா அறிமுகம் என்றாலும், அவரை சுற்றி நடித்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள், ஆனால் அவர்களுடன் இணைந்து நடிக்கும் போது ருத்ரா ., அத்தனை பேர் மத்தியிலும் ரசிகர்கள் கவனம் தன் மீது இருக்கும் வகையில் தைரியமாக நடித்திருக்கிறார். நான் கூட என் முதல் படத்தில் இப்படி தைரியமாக நடிக்கவில்லை, அதனால் அவர் சினிமாவில் கதாநாயகனாக நிச்சயம் ஒரு இடத்தை பிடிப்பார், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் படம் பற்றி கூறுகையில்.,
”முகேஷ் மஞ்சுநாத் என்பவரது கதை இது, நான் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன். விளம்பர படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்ததால் திரைப்படம் இயக்குவது காலதாமதமாகி விட்டது. ’மாடர்ன் லவ்’ படத்தில் நான் ஒரு எப்பிசோட் இயக்கியிருந்தேன், அதை பார்த்துவிட்டு தான் விஷ்ணு என்னை அழைத்தார். இந்த கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. இந்த தலைப்பும் விஷ்ணு தான் சொன்னார். அவர் முதல் முறை தலைப்பு சொன்ன போதே எனக்கு பிடித்துவிட்டது.
ருத்ராவுக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும். இந்த கதையில் பள்ளி, கல்லூரி, அதன் பின் , வேலைக்கு செல்வது என்று நாயகன் மூன்று காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிக்காட்ட வேண்டும், அதற்கு ருத்ரா மிக சரியானவராக இருந்தார். அவரது முகத்தில் மூன்று விதமான காலக்கட்டத்தின் வளர்ச்சியை காட்டுவது எனக்கு எளிதாக இருந்தது. எனவே, இந்த படம் ருத்ராவுக்கு மிகச்சரியான அறிமுகமாக இருக்கும்.” என்றார்.
நாயகனாக அறிமுகமாகும் ருத்ரா .,
“சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அண்ணன் நடிகரான போது எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அது புதிய அனுபவமாக இருந்தது. அப்போதே நடிப்பு தான் என்று முடிவு செய்து விட்டேன். ஆனால், சினிமாவைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பிறகு அண்ணனின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு பணியையும் கவனித்து வந்தேன். அதன் மூலம் சினிமா மீதான புரிதல் இருக்கிறது.
நடிகராக வேண்டும் என்பது தான் என் நோக்கம், அதே சமயம் சினிமாவைப் பற்றி பிராக்டிக்கலாக தெரிந்துகொள்வதற்காக தான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஆனால், உதவி இயக்குநராக வேலை செய்த போது எனக்குள் படம் இயக்கும் ஆசையும் வந்து விட்டது. சில கதைகள் எழுதினேன். அதை வெவ்வேறு திரைக்கதைகளாக எழுதி, அண்ணனிடமும் சொல்வேன், இப்படி இயக்குநர் ஆசை என்னை அறியாமலேயே என்னுள் வந்துவிட்டது, அதனால் எதிர்காலத்தில் நிச்சயம் படம் இயக்கவும் செய்வேன்.” என்றார்.
நடிகராகும் தம்பிக்கு என்ன அறிவுரை கொடுத்தீர்கள் ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “இப்போது உள்ள பசங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை, அவர்களுக்கே அனைத்தும் தெரிகிறது. என்னுடைய சினிமா வாழ்க்கை, நான் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தையும் ருத்ரா பார்த்துக்கொண்டிருப்பதால், அவருக்கு சினிமாவில் எப்படி இருக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். சினிமாவில் எனக்கு கிடைக்காதவை அனைத்தும் அவருக்கு கிடைத்திருக்கிறது, அதனால் அவர் என்னை விட அதிஷ்ட்டசாலி தான். எனக்கு எப்படி ஒரு குருவாக சுசீந்திரன் சார் கிடைத்தாரோ, அதுபோல் ருத்ராவுக்கு கிருஷ்ணா கிடைத்திருக்கிறார். ருத்ராவை வைத்து என் நிறுவனத்தில் தொடர்ந்து படங்கள் இயக்க விருப்பம் தான், நிச்சயம் என் தம்பி வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.” என்றார்.
படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக மிதிலா பால்கர் நடித்திருக்கிறார். சமூக வலைதள பிரபலமான இவருக்கு இது தான் முதல் படம் என்றாலும் இவரது திரை இருப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று இயக்குநர் கிருஷ்ணகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின், கஸ்தூரி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை, அருண் குரியன், விஜயசாரதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஜென் மார்டின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.சி.பிரணவ் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். முகேஷ் மஞ்சுநாத் கதை எழுத, சாரதா மற்றும் முகேஷ் மஞ்சுநாத் இணைந்து கூடுதல் வசனம் மற்றும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஹகிக் ஏ.ஆர், கார்த்திக் நேத்தா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் ‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தை அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் மொத்த படக்குழுவும் ஈடுபட்டுள்ளது.