Take a fresh look at your lifestyle.

நான் , சின்ன வயதில் நடித்த படம்!

'காட்டேரி' படம் குறித்து நடிகை வரலட்சுமி 'கலகல' பேச்சு!!

55

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினர்.

இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.” திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருந்தது. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமே’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பற்றி இயக்குநர் பெருமிதமாக பேட்டி அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். சினிமா மீது இயக்குநர் டீகேக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்,

“நான் சின்ன வயதில் நடித்த படம் இந்த ‘காட்டேரி’ என இப்படம் திரைக்கு வருவது, சற்றே தாமதமானதை கிண்டலா கூறிவிட்டு தொடர்ந்து ., இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.

படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார். ரசிகர்களுக்கு நல்லதொரு திரை விருந்தாக இருக்கும் காட்டேரி ” என்று அமர்ந்தார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘காட்டேரி’ படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.